கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வாகனத்தை மறித்து அவர் முன்பே அந்த கட்சியினர் இருபிரிவாக பிரிந்து மோதிக்கொண்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வெற்றி பெற்று எம்பியாகினர். இந்நிலையில் தான் மீண்டும் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் திருமாவளவன் சிதம்பரத்திலும், ரவிக்குமார் விழுப்புரத்திலும் களமிறங்கி உள்ளனர். இருவரும் தங்களின் தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமாவளவன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பிற வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருமாவளவன் கடலூரில் திருமாவளவன் பிரசாரம் செய்தார். இந்த தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத் களமிறங்கி உள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் சிவக்கொழுந்து, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று திருமாவளவன் தீவிர பிரசாரம் செய்தார். புவனகிரியில் பிரசாரத்தை முடித்த திருமாவளவன் ஜெயங்கொண்டான் நோக்கி சென்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திருமாவளவனின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதோடு கஸ்பா ஆலம்பாடி மற்றும் நத்தமேடு பகுதிக்கு வந்து பிரசாரம் செய்துவிட்டு போகும்படி வலியுறுத்தினர்.
அதற்கு திருமாவளவன் உடன்படவில்லை. இரவு நேரம் என்பதாலும், நேரம் ஆகிவிட்டதாகவும் கூறிய திருமாவளவன் இன்னொரு நாளில் கண்டிப்பாக கிராமத்துக்கு வந்து பிரசாரம் செய்வதாக சமாதானம் செய்தார். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்கவில்லை. திருமாவளவன் கண்டிப்பாக வந்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரது வாகனத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றவே கைக்கலப்பானது. இருதரப்பினரும் மாற்றி மாற்றி தாக்கி கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை விரட்டினர். திருமாவளவன் முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.