என்ஐஏ அதிகாரிகள் மீது வழக்கு: மேற்கு வங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2022-ல் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத்தின் பூர்பா மேதினிபூர் மாவட்டம் பூபதிநகரில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது உள்ளூர் மக்களுடன் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மேற்கு வங்க போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 என்ஐஏ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பினர்.

இதற்கு எதிரான வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜெய் செங்குப்தா, “என்ஐஏ அதிகாரிகள் சட்டப்படியே சோதனை நடத்தச் சென்றுள்ளனர். இதற்கு மாநில போலீஸாரிடம் அனுமதி பெறத்தேவையில்லை. கும்பல் வன்முறையால் என்ஐஏ அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்ஐஏ கைது செய்துள்ள ஒருவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான பிரிவின் கீழ் மாநில காவல் துறை எப்ஐஆர் பதிவு செய்துள்ளது பெரிதும் வியப்பு அளிக்கிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதி தனதுஉத்தரவில், “இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே கேஸ் டைரியை போலீஸார் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு 29-ம் தேதி விசாரிக்கப்படும். அதுவரை குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை போலீஸார் கைது செய்யக் கூடாது. 72 மணி நேர நோட்டீஸுக்கு பிறகு அந்த அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக போலீஸார் விசாரணை நடத்தலாம். என்றாலும் இந்த விசாரணை பதிவு செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.