மைக் சின்னத்தின் வடிவத்தில் மாற்றம்: நாதக புகார்!

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்த சின்னத்தின் வடிவிலான மைக்கையே பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வடிவிலான ‘மைக்’ சின்னத்தை பொருத்தாமல், வேறு வடிவில் உள்ள மைக் சின்னத்தை பொருத்துவதாக நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

தொடர்ந்து, இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனம் தேர்தல் ஆணையத்துக்கு சின்னம் குறித்த புத்தகத்தை அச்சடித்து வழங்குகிறது. அதில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு பயன்படுத்திய அந்த புத்தகத்தை பார்த்து, இங்கு நாம் தமிழர் கட்சிக்கு அதில் உள்ள மைக்கை பொருத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய சின்னத்தில், ஆன், ஆப் பட்டன் இல்லை. ஆனால், இங்கு பொருத்தப்படும் சின்னத்தில் உள்ளது. இது எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை பாதிக்கும். எனவே, அவற்றை அகற்றிவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.