மக்களவைத் தேர்தல் முடியும் வரை மோடி பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்து தேர்தல் பணியாற்றி வருகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டின் பக்கம் தேசிய தலைவர்களின் பார்வை திரும்பியுள்ளது. பிரதமர் மோடி இந்த ஆண்டில் மட்டும் 7 முறை தமிழகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 7 ஆவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். மேலும், வேலூர், மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடியும் வரை மோடி பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் மோடியின் பேச்சு, முழுக்க முழுக்க மதத்தையம், சாதியையும் முன்வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கிறது!
குறிப்பாக:
1. 06/04/2024 அன்று, உத்தர பிரதேசத்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் அறிக்கை போல இருப்பதாக பேசினார்.
2. 08/04/2024 அன்று, பீகாரில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ராமரை இழிவுபடுத்தியதாகக் கூறினார்.
3. 09/04/2024 அன்று, உத்தர பிரதேசத்தில் பேசுகையில், நவராத்திரி முதல் நாளன்று தேவியை வணங்குபவர்கள் காங்கிரசையும் அதன் கூட்டணி கட்சிகளையும் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
4. தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நல்ல சாதியை சார்ந்த ஒருவர் தங்கள் கட்சி தலைவராக இருப்பதாகக் கூறி, பிற சமூக மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தினார். இவை அனைத்தும் வன்மையான கண்டனத்திற்குரிய பேச்சு. இப்பேர்பட்ட ஒருவர் இந்திய நாட்டின் பிரதமர் என்று சொல்வது இந்தியாவிற்கே தலைகுனிவு. பிரதமர் மோடியின் பேச்சுக்கள் யாவும், இச்சட்டப்பிரிவிற்கு எதிரானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 125: தேர்தல் தொடர்பாக வகுப்பினரிடையே பகைமையை ஊக்குவித்தல்: இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் தொடர்பாக எந்த ஒரு நபரும் இந்திய குடிமக்களில் மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி, பகை அல்லது வெறுப்பு உணர்வுகளை, பல்வேறு வகுப்பினரிடையே ஊக்குவிக்க அல்லது ஊக்குவிக்க முயற்சி செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார். தேர்தல் ஆணையம் பாஜகவின் கூட்டணி கட்சியாக செயல்படாமல் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், இந்தியாவில் 2024 தேர்தல்கள் முடிவடையும் வரை அவரது பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.