பொன்முடிக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் தள்ளிவைப்பு!

பொன்முடி வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். அதை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமாக இருப்பவர் பொன்முடி. கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்திலும், அதன்பிறகு வேலூரிலும் நடைபெற்றது. இதனை விசாரித்த வேலூர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து 2023 ஜூன் மாதம் 28ஆம் தேதி பொன்முடியை விடுவித்தது. இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படவில்லை. ஆனால், பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என பொன்முடி வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானே விசாரிப்பேன் என்று அறிவித்ததோடு, வேண்டுமானால் உச்ச நீதிமன்றம் செல்லுங்கள் எனவும் கறாராக தெரிவித்தார். மறுஆய்வு வழக்கு விசாரணைக்கு எதிராக பொன்முடி மேல்முறையீடு செய்தார். ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் நீதித் துறையில் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை எதிர்கொள்ள பொன்முடிக்கு அறிவுறுத்தியது.

பொன்முடி வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பிப்ரவரி 19 – 23 தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. அதன்பிறகு மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை என மாற்றப்பட்டது. அப்போதும் விசாரணை நடைபெறவில்லை. வழக்கு ஏப்ரல் மாதம் 15 முதல் 19ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.

இந்த நிலையில் ஓபிஎஸுக்கு எதிரான சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கு சில நாட்களுக்கு முன்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அத்துடன், பொன்முடி வழக்கின் விசாரணையையும் நீதிபதி தள்ளிவைத்தார். அதாவது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஓபிஎஸ் மீதான வழக்கை விசாரித்துவிட்டு பொன்முடி வழக்கை விசாரிப்பது நல்லது” என்பதால் அதை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இது பொன்முடி தரப்புக்கு மிகுந்த நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.