15 சீட்டும், 1000 கோடி பணமும் தருவதாக சொல்லி கூப்பிட்டாங்க: சீமான்

15 சீட் தருவதாகவும், 1,000 கோடி பணம் தருவதாகவும் கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள், ஆனால் நான் போகவில்லை எனக் கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மைக் சின்னத்திற்கு ஆதரவாக தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார் சீமான். நேற்று நாமக்கல் லோக்சபா தொகுதி நாதக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பரமத்தி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் சீமான். அப்போது சீமான் கூறியதாவது:-

தொடர்ந்து அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போட்டு எங்களை ரோட்டுல போட்டதுதான் மிச்சம். மக்கள் மீதான அக்கறையில்தான் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பரப்புரை செய்கிறோம். 15 ஆண்டுகாலமாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்? கவுன்சிலர், ஒரு எம்.எல்.ஏ, எம்.பி? ஒரு இழவும் கொடுக்கவில்லை.

ஆனால் இதையெல்லாம் கொடுக்கிறேன் என கூட்டணிக்கு அழைத்தார்கள். 15 சீட், 2026-ல் நீங்கள்தான் முதலமைச்சர், 1,000 கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்லி கூப்பிட்டார்கள். குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில் கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம். கை சின்னத்தில் காங்கிரஸ், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுகிறது.

பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை மட்டும் எடுத்துக் கொண்டனர். ஏன் எடுத்தனர்? பயம். அந்த சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக் கூடாது என்ற பயம். பாஜக முதலில் இங்கு தேர்தல் நடத்த காரணம், எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். திரும்ப திரும்ப மோடி ஓடி ஓடி வருகிறார். ஏன்? எப்படியாவது அந்த வாக்கு இயந்திரத்துக்குள் வேலையைக் காட்டி பாஜக வென்று விட்டதாக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.