வடலூர் சத்தியஞான சபையின் பெருவெளியில் சர்வதேச மையம்அமைக்க எதிர்ப்பு தொடர்வதையடுத்து, அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வள்ளாருக்கு நிலத்தை வழங்கிய பார்வதிபுரம் கிராம வம்சாவளியினர், பெருவெளியில் மையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றினர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, தைப்பூசத்தில் 3 லட்சத்துக்கும் மேலான மக்கள் இங்கு கூடுவர். இந்நிலையில், மக்கள் கூடும் பெருவெளியில், தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு, கடந்த பிப்.17-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதற்கிடையே, இந்த மையத்தை பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமல், வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று வள்ளலார் அன்பர்கள் மற்றும் சத்தியஞான சபைக்காக வள்ளலாருக்கு நிலத்தை வழங்கிய பார்வதிபுரம் கிராம வம்சாவளியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வள்ளலார் பணியகம்-தெய்வத்தமிழ் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பார்வதிபுரம் பகுதியில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர் எதிர்ப்பு காரணமாக சர்வதேச மையத்துக்கான அஸ்திவாரம் தோண்டும்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடந்த 3 நாட்களாக பணிகள் நடைபெறவில்லை.