மக்களவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்படும். 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.
டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:-
மோடியின் உத்தரவாதங்கள்: கடந்த 2020-ம் ஆண்டில் பிஎம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷனில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் இதுவரை 4 கோடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மேலும் 3 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
* பிஎம் சூர்ய கர் திட்டத்தில் ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்படும்.
* மாநில அரசுகளுடன் இணைந்து நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2, 3-ம் கட்ட நகரங்களில் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கருப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.
* நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவல் நிலையங்களில் பெண்களுக்கான சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படும்.
* மின்னணு சாதன உற்பத்தி,பாதுகாப்பு துறை, ஆட்டோமொபைல் துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.
* மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவிவழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
* மீன் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மீன்வள துறை சார்ந்த காப்பீடு திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
* கடலோர பகுதிகளில் மீன்களை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும்.
* முத்து, கடற்பாசி வளர்ப்புக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
* மீனவர் பாதுகாப்புக்காக சிறப்பு செயற்கைக்கோள் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* வேளாண் துறைக்காக விண்ணில்சிறப்பு செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். நாடு முழுவதும் 25,000 வேளாண் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படும்.
* தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
* தீவிரவாதத்துக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
* எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
* குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய தடயவியல் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மத்திய அரசின் திட்டங்கள் மக்களை முறையாக சென்றடைவதை உறுதிசெய்ய மாவட்டம்தோறும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். இந்த குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
* போக்குவரத்தை ஒழுங்குபடுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.
* அணுமின் சக்தி, மரபுசாரா, ஹைட்ரஜன் எரிசக்தி திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
* ஊழலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
* உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பாரதம் 5-வது இடத்தில் உள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டுவோம். உள்நாட்டில் சரக்கு விமானங்கள், பயணிகள் விமானங்களை தயாரிக்க புதிய திட்டம் வரையறுக்கப்படும். வாகன உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, செமி கண்டக்டர்,சிப் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி,செயற்கை வைர உற்பத்தியில் உலகின் முன்னோடியாக பாரதம் மாறும்.
* நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்குபகுதிகளில் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* பொது வாக்காளர் பட்டியல் அறிமுகம் செய்யப்படும்.
* நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும். அடுத்ததாக 6ஜி சேவைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
* வரும் 2047-ம் ஆண்டுக்குள் பெட்ரோலிய இறக்குமதி கணிசமாக குறைக்கப்படும்.
* நாடு முழுவதும் 1.10 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் காஸ் விநியோகம் செய்யப்படும்.
* நாடு முழுவதும் 30 லட்சம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். சர்வதேச விமான நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* பாரதத்தின் பாரம்பரிய யோகா, ஆயுர்வேதம், பாரதத்தின் மொழிகள், இசையை பரப்ப உலகம் முழுவதும் ‘திருவள்ளுவர் கலாச்சார மையங்கள்’ உருவாக்கப்படும். பகவான் ஸ்ரீராமரின் புகழ் உலகம் முழுவதும் பரப்பப்படும். உலகம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் பாரதத்தின் செம்மொழிகள் (சம்ஸ்கிருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா) குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஊக்கம் அளிக்கும்.
* அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடியில் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு இந்திய வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அடுத்த கட்டமாக நிலவுக்கு விண்வெளி வீரர் அனுப்பப்படுவார் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ‘இந்தியர்களின் 500 ஆண்டு கால கனவை, நனவாக்கும் வகையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 5-வது இடத்துக்கு பாரதம் முன்னேறி உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அம்ருத் பாரத், நமோ பாரத் உள்ளிட்ட ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
* இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பிய பொருளாதார வழித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை பாரதம் பெற்றுள்ளது. இந்தியாவின் முயற்சியால் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது’ என்பது உள்ளிட்ட 10 ஆண்டுகால சாதனைகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.