இடதுசாரிகள் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் கவிஞர் சினேகன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. கமல் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், லோக்சபாவில் அவர்கள் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கமல், சினேகன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதன்படி திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாகக் கவிஞர் சினேகன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருப்பூரில் அவர் பேசியதாவது:-
என்னமோ தேவதூதன் மாதிரி விமானத்தில் வந்து இறங்குவார்களாம். எங்கெல்லாம் கும்பல் இருக்கிறதோ அங்கு மட்டும் அரை கிலோமீட்டர் ரோட்ஷோ நடத்துவார்களாம். அந்த அரை கிமீ கூட ஆள் இல்லாமல்.. தொடக்கத்தில் இருக்கும் கும்பலையே அப்படியே நகர்த்துவார்களாம். என்னடா பிலிம் காட்டறீங்க.. தமிழ்நாட்டில் அரை கிமீ நடந்துவிட்டால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என நினைக்கிறார்களா.. தயவு செய்து நிறுத்துங்க முடியல.. நான் ரொம்ப கெட்டவன்.. இப்போ தான் கமல் உடன் சேர்ந்த பிறகு கெட்ட வார்த்தை எல்லாம் பேச வேண்டாம் என இருக்கிறேன். ஆனால், தரை லோக்கல் நான். இறங்கி அடித்தால் அடிப்பது தெரியாது.. வலிப்பது மட்டும் தான் தெரியும். தேர்தல் சமயத்தில் அரை கிமீ நடந்தால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா..
தமிழ்நாட்டில் எத்தனை முறை மழை வந்தது.. வெள்ளம் வந்தது.. இயற்கை பேரிடர் வந்தது.. கொரோனாவால் நாம் தத்தளித்தோம்.. அப்போதெல்லாம் மோடி இங்குப் பார்க்க வந்தாரா.. இதை நாம் கேட்டால் பதிலுக்கு இதற்கு முந்தைய பிரதமர்கள் யாராவது வந்தார்களா என கேட்கிறார்கள். அவர்கள் வரவில்லை என்பதால் தான் அவர்களை அனுப்பிவிட்டோம். அதை விட்டுவிடுங்கள். இந்தளவுக்குப் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் தமிழ்நாடு பக்கம் எட்டிக்கூடப் பார்க்காத பிரதமர்.. இப்போது மட்டும் பல முறை வருகிறாரே.. அதற்குத் தேர்தல் மட்டுமே காரணம். மோடி அவர்களே நீங்கள் இந்தியாவின் பிரதமர் என்பதால் மட்டுமே இந்தளவுக்கு மரியாதை தந்து பேசி வருகிறோம்.
தமிழ் மொழி குறித்து உலகெங்கும் பேசி வருவதாகச் சொல்லி வருகிறார். ஆனால், இதை யாரும் நம்ப மாட்டார்கள். செம்மொழியான தமிழுக்கு அவர்கள் ஒதுக்கிய தொகை 74 கோடி ரூபாய்.. ஆனால், சமஸ்கிருதத்திற்கு மட்டும் 1488 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். ஆனால், வெளியே மட்டும் தமிழ் தமிழ் எனச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார். நேற்று இங்க வந்து எனக்குத் தோசை பிடிக்கும், இட்லி பிடிக்கும், சட்னி பிடிக்கும் என்கிறார். ஆனால், அரிசிக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி போடுகிறார். அது ஏன்.
திருப்பூர் அருகே சமீபத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தைப் பார்த்து இருப்பீர்கள். அதில் மோடி இந்தியில் பேசும் போது அவ்வளவு கைதட்டு.. ஆனால், அதைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது யாரும் கண்டுகொள்ளவில்லை. அதாவது இங்கிருந்த வடமாநில தொழிலாளர்களை அங்குக் கூட்டத்தைக் காண்பிக்க அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு மோடி பேசிய இந்தி புரிந்தது கைதட்டினார்கள். ஆனால், தமிழ் புரியவில்லை. இப்படி தான் கூட்டத்தைச் சேர்ப்பீர்கள். நான் இப்படிச் சொல்வதால் வடமாநிலத்தவருக்கு எதிராகப் பேசுகிறேன் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்தை, ஊரை, நட்பை விட்டுவிட்டு நீங்கள் இங்கு வந்து இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறீர்கள். அந்த உழைப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், உங்கள் ஊரில் உங்களால் பிழைக்க முடியாமல் போனதற்குக் காரணமே இந்த மோடி அரசு தான். இவ்வாறு அவர் பேசினார்.