பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.
ராமர் பெயரில் ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்ததுடன் எதிர்க்கட்சியினரை இஸ்லாமிய மதத்தின் ஆதரவாளர்களாக மோடி சித்தரித்துள்ளார். பிரச்சாரத்தில் மதத்தை பயன்படுத்தியதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
எந்தவொரு கட்சியும், வேட்பாளரும் பிரிவினையை ஏற்படுத்தும் அல்லது பரஸ்பர வெறுப்பை ஏற்படுத்தும் அல்லது வெவ்வேறு சாதிகள் அல்லது சமூகங்கள், மத அல்லது மொழியியல் ஆகியவற்றுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்று விதி கூறுகிறது. ஆனால், மோடி அதனை மீறி கடவுள் பெயர்களை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பயணித்து பிரச்சாரம் செய்வது தேர்தல் விதிமீறல் என்றும் அவரது மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால், பிரதமர் மோடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறையும் வாரணாசியில் தான் போட்டியிட்டிருந்த நிலையில், இந்த முறையும் அவர் அங்கே தான் களமிறங்குகிறார். இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.