தமிழிசை சவுந்தரராஜன் நடத்திய இணையதள மீட்டிங்கில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபரை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரை முழு அளவில் சந்தித்து ஆதரவு திரட்ட முடியவில்லை என நினைத்த தமிழிசை, இணைய வழி (ஜூம் மீட்டிங்) மூலம் நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த ஜூம் மீட்டிங்கில் 200-க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே திடீரென ஏராளமான ஆபாச புகைப்படங்கள் அடுத்தடுத்து பதிவிடப்பட்டது. இதைக் கண்டு தமிழிசை அதிர்ச்சி அடைந்தார். இணைய வழியில் இணைந்திருந்த குடியிருப்புவாசிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி அடுத்தடுத்து இணைப்பை துண்டித்து வெளியேறினர்.
இதையடுத்து, ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழிசை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.