பா.ஜ.க நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது: பிரியங்கா காந்தி

பா.ஜனதா அரசு நாட்டின் பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 14 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி மே 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அசாமின் ஜோர்கட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோயை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார்.

விமானம் மூலம் ஜோர்கட் சென்றடைந்த பிரியங்கா காந்தி டிடபோர் சாரியாலி நகரில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாகன பேரணியில் பிரியங்கா காந்தியுடன் கவுரவ் கோகோய், மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போரா, கட்சியின் மாநில பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

வாகன பேரணியின் போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “வடகிழக்கு மாநிலங்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியம் கொண்டவை. ஆனால் பா.ஜனதா அரசு அந்த பாரம்பரியத்தின் மீது தனது சொந்த விதிகளை திணித்துள்ளது. மேலும், பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை மக்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளன” என குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரசின் 5 நீதி உத்தரவாதங்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை பலப்படுத்தும்” என கூறினார்.