முதல்வர் ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தனது பிரசாரத்தை முடித்து கொண்ட கையோடு மெரினா கடற்கரைக்கு சென்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும் அவர் அந்த போட்டோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கருணாநிதி குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தான் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மாலை 6 மணியுடன் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் ஓய்ந்தது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 22ம் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். பல்வேறு பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வாக்கு சேகரித்தார். சென்னையில் உள்ள வடசென்னை, தென்சென்னை, மத்திய தென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசி தனது லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டார்.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு நேரடியாக சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு உள்ள மறைந்த முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ஸ்டாலினுடன் அவரது மகனும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். அதன்பிறகு தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய போட்டோக்களை முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், ‛‛ஆளாக்கிய தலைவரின் நினைவிடத்தில்” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு உள்ளார்.