அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை, அவரது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்கு வந்தார். பின்னர், நெடுங்குளம் ஊராட்சிக் குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “முதல் தலைமுறை வாக்காளர்கள், வாக்காளர் பெருமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மகன் மிதுன் குமார், மருமகள் திவ்யா ஆகியோர் வாக்குப் பதிவு மையத்துக்கு நடந்து சென்று வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார் இபிஎஸ். இதுதொடர்பாக எக்ஸில் பதிவிட்டுள்ள அவர்,”உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று. நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று.ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.