தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக தனது கான்வாயை வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்திவிட்டு தனது மனைவியுடன் நடந்தே சென்று வாக்களித்தார்.

18வது மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரியில் நான்கு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் ஒரு வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். காலை நேரம் என்பதால் அந்த வாக்குச்சாவடியில் அதிக அளவிலான கூட்டம் இல்லை. எனவே சிறிது நேரம் மட்டுமே வரிசையில் காத்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தனது பாதுகாப்பு கான்வாயில் சித்ரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு வந்தார். தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100 மீட்டருக்கு முன்பாகவே அவரது பாதுகாப்பு வாகனமானது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மகளிர் கல்லூரி வளாகம் மற்றும் வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்தே வந்தார். அவரது காரை மட்டும் அனுமதிப்பதாக கூறிய நிலையில் விதிப்படி தான் நடந்து செல்வதே சரியாக இருக்கும் எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் 100 மீட்டர் நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் தனக்கு முன்னதாக காத்திருந்த வாக்காளர்களுக்கு வணக்கம் கூறி சிறிது நேரம் காத்திருந்த பிறகே அவர் வாக்களிக்கச் சென்றார்.