அமித் ஷா மார்பிங் வீடியோ: போலீஸார் முன்னிலையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி வழக்கறிஞர் ஆஜர்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மார்பிங் வீடியோ வழக்கு தொடர்பாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் நேற்று டெல்லி போலீஸார் முன்பு ஆஜராகி, ‘அந்த வீடியோ வெளியானது ரேவந்த் ரெட்டிக்கு சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் இருந்து அல்ல’ என்று விளக்கம் அளித்தார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த மாதம் 23-ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, பாஜக ஆட்சிக்கு வந்ததும், சட்டத்துக்கு புறம்பாக தெலங்கானாவில் உள்ள முஸ்லீம் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்றும், அதற்கு பதில், எஸ்சி, எஸ்டி, பி.சி.க்களுக்கு அந்த இடஒதுக்கீட்டை திரும்ப வழங்குவோம் என்று பேசி இருந்தார். ஆனால், இதனை சிலர் மார்பிங் செய்து, எஸ்சி, எஸ்டி, பி.சி.க்களுக்கும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என அமித் ஷா கூறியதாக போலி வீடியோக்களை வெளியிட்டனர். இந்த மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவை தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூட தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது வைரல் ஆனது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் ஏப்.28-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அந்த வீடியோ மார்பிங் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்த கடந்த 29-ம் தேதி டெல்லி போலீஸார் ஹைதராபாத்துக்கு வந்தனர். பின்னர் ஹைதராபாத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் (காந்தி பவன்) இருந்த கட்சி நிர்வாகிகளான அஸ்லாம் தஸ்மீன், சதீஷ், நவீன் மற்றும் சிவகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும், சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினர்.

அந்த நோட்டீஸில் ‘மே 1-ம் தேதி தங்களது செல்போனுடன் டெல்லி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அனைவரும் ஆஜராக வேண்டும்’ என டெல்லி போலீஸார் கூறி விட்டு சென்றனர். இதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று டெல்லி காவல் நிலையத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தரப்பில் சவும்யா குப்தா எனும் வழக்கறிஞர் ஆஜராகி விளக்க மனு அளித்தார். அந்த மனுவில், ‘தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும், அமித் ஷா மார்பிங் வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரேவந்த் ரெட்டி பெயரில் உள்ள ஒரு சமூக வலைதளத்தில் அந்த வீடியோ வெளியாகி உள்ளதாக கூறி டெல்லி போலீஸார் விளக்க நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அது ரேவந்த் ரெட்டியின் கணக்கில் உள்ள சமூக வலைதளமே இல்லை. ரேவந்த் ரெட்டிக்கு சொந்தமான 2 சமூக வலைதளங்கள் எவை என்பது மக்களுக்கே நன்றாக தெரியும்’ என விளக்க மனுவை வழங்கி உள்ளார்.