சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ!

சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனையை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு இந்த சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை சோதனையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் நடத்தினர். இது, நேற்று கடற்கரையிலிருந்து தரையில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணை வாகனம் மூலம் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணை என்பது அடுத்த தலைமுறை ஏவுகணை அடிப்படையிலான நீர்மூழ்கி வெடிகுண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை டார்ப்பிடோ ஏவுகணையை இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்த் திறனை மேம்படுத்துவதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அடுத்த தலைமுறை ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேலும் அதிகரிக்கும் என்று டிஆர்டிஓ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எதிரிநாட்டு கப்பல்களைத் தாக்குவதற்காக இந்த வகை சூப்பர்சானிக் டார்ப்பிடோ ஏவுகணைகள் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.