தேர்தல் பத்திர விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கூறுவது தவறு: கபில் சிபல்!

“தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது, அவை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக உள்ளது” என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பங்கேற்பாளர்களிடம் கலந்து ஆலோசித்து சிற்சில மாற்றங்களுடன் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதனைக் கண்டித்துள்ள கபில் சிபல் கூறியதாவது:-

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில் ‘நாங்கள் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவோம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அவை வெளிப்படைத் தன்மைக்காக அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் கூறியிருக்கிறார். இது தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு நேர் எதிரானது.

உச்ச நீதிமன்றும் கூறும்போது தேர்தல் பத்திரம் வெளிப்படையானது இல்லை. அவை வெளிப்படைத் தன்மையில்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளன என்று கூறியது. இப்போது அவர்கள் (பாஜக) சந்திக்கும் பிரச்சினை என்னவென்றால், அவர்களிடம் இந்தத் தேர்தலுக்கு பணம் இருக்கிறது. அவர்கள் தோற்றுப்போனால் பணம் வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். என்றாலும், நிர்மலா சீதாராமன் அவர்கள் (பாஜக) வெற்றி பெறுவார்கள் என்றும், மீண்டும் அதை (தேர்தல் பத்திரங்கள்) கொண்டுவருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திர விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஏன் கருத்து எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறார். பிரதமர் மோடியும் தேர்தல் பத்திரங்களை பாதுகாக்கும் முயற்சியிலேயே இருக்கிறார். அது குறித்து உச்ச நீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்த பின்னர் தேர்தல் நேரத்தில் இவ்வாறு பேசுவது மிகவும் தவறானது. நாம் விலை குறைய வேண்டும் என்பதற்காக இறக்குமதி செய்கிறோம். அவர்கள் தேர்தலில் தோல்வியைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக பருப்பை இறக்குமதி செய்கிறார்கள். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.