காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள பிரசாரம் மற்றும் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் பேரணியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் ராகுல் காந்தி மீண்டும் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தி திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பிரசாரம் மற்றும் ‛இந்தியா’ கூட்டணியின் பேரணியில் பங்கேற்காமல் ஓய்வில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது லோக்சபா தேர்தலையொட்டி ராகுல் காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் சாத்னாவில் காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் கண்டன பேரணியில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று ராகுல் காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் 2 நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ராகுல் காந்தி சாத்னா பொதுக்கூட்டம் மற்றும் ராஞ்சியில் நடக்கும் ‛இந்தியா’ கூட்டணி பேரணியில் பங்கேற்க தயாராகி இருந்தார். ஆனால் அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழலில் டெல்லியில் இருந்து அவரால் கிளம்பி வர முடியவில்லை. ராகுலுக்கு பதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா’ கூட்டணி பேரணி மற்றும் சாத்னா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்” என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ராகுல் காந்திக்கு எந்த மாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஜெய்ராம் ரமேஷ் கூறவில்லை. இதற்கிடையே தான் ராகுல் காந்தி விரைவில் குணமாகி வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.