‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் இருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடங்கும் என நம்புகிறேன்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பகவான் மகாவீர் 2,550-வது ஜெயந்தி விழா டெல்லியில் உள்ளபாரத மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
நமது நாடு விரக்தியில் இருந்த கால கட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல் நமது தேசத்தின் பாரம்பரியத்தை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதேநேரம், நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
தற்போது உலக அளவில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உண்மை, அகிம்சை மூலம் தீர்வு காண முடியும் என்று இந்தியா தன்னம்பிக்கையுடன் எடுத்துரைக்கிறது. அதற்கு நமது கலாச்சாரம் முக்கிய பங்காற்றி வருகிறது. யோகா, ஆயுர்வேதா போன்றந மது பாரம்பரிய அம்சங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நமது பாரம்பரியம்தான் நமது அடையாளம் என்பதை புதிய தலைமுறையினர் நம்புகின்றனர்.
தற்போது மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இருந்துதான் நாட்டின் எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடங்குகிறது என்று நம்புகிறேன். உலக அளவில் பல்வேறு மோதல்கள் நடந்துவரும் நிலையில், தீர்த்தங்கரர்கள், சமண குருமார்களின் போதனைகள் தற்காலத்துக்கும் மிக அவசியமாக உள்ளன. மத குருமார்களுக்கு தாமரையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. புனிதமான செயல்களில் தாமரை மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய தாமரைதான் பாஜகவின் சின்னமாக உள்ளது.
இந்தியா மிக பழமையான நாகரிகம் கொண்டது மட்டுமல்ல. மனித குலத்துக்கு மிகவும் பாதுகாப்பான இடமும்கூட. பகவான் மகாவீரரின் அமைதி, பொறுமை, சகோதரத்துவம் போன்ற போதனைகள் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தரக்கூடியவை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக ராஜஸ்தானில் பிரச்சாரம்: ராஜஸ்தானின் ஜலோர், வகாட் நகரங்களில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவன். என் வீட்டில் மின்சாரம், குடிநீர் வசதி கிடையாது. எனது தாய் விறகு அடுப்பில்தான் சமையல் செய்வார். அதனால், ஏழைகளின் துயரங்களை என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல்கட்டமாக பெண்களின் துயரத்தை துடைக்க நடவடிக்கை எடுத்தேன். மத்திய அரசின் திட்டத்தால் ராஜஸ்தானில் மட்டும் 19 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பழங்குடியின, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ரேஷனில் இலவசமாக உணவு தானியம் வழங்கப்படுகிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தற்போது ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய தகடு பொருத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தால் ஏழை குடும்பங்களின் வீடுகளில் மின் கட்டணம் பூஜ்ஜியமாகும்.
லட்சாதிபதி பெண்கள் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகளாகி உருவெடுத்து உள்ளனர். அடுத்தகட்டமாக 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற அயராது பாடுபட்டு வருகிறோம். முத்ரா யோஜனா திட்டத்தில் இதுவரை ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. மத்தியில் 3-வது முறையாக பாஜக பதவியேற்ற பிறகுஇந்த தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.
நேரு காலத்தில் சர்தார் சரோவர் அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. நான் குஜராத் முதல்வரான பிறகு அந்த திட்டத்தை நிறைவு செய்தேன். காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சி இப்போது 300 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள்கூட கிடைக்கவில்லை. மக்களவை தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதற்குக்கூட காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகின்றனர். அவர்கள் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் வாரிசு அரசியலை பின்பற்றுகிறது. அந்த கட்சிகளின் தலைவர்கள், தங்கள் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர். பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகிறோம். இண்டியா கூட்டணி கட்சிகளின் நிலைமையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அந்த கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் ஒருவருக்கு எதிராக ஒருவர் போட்டியிடுகின்றனர். இவர்களிடம் எப்படி நாட்டை ஒப்படைப்பது. இவ்வாறு பிரதமர் பேசினார்.