பிரதமர் மோடியின் சர்வாதிகாரி முகம் இப்போது வெளிப்பட்டு நிற்கிறது: ராகுல் காந்தி!

சூரத் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு சுயேட்சைகள் வேட்பு மனுக்களும் வாபஸ் பெற வைக்கப்பட்டு பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி இருப்பதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் லோக்சபா தொகுதியில் ஏற்கனவே பாஜக 9 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2014, 2019 தேர்தல்களில் சூரத் தொகுதியில் பாஜக சுமார் 75%, 76% வாக்குகளைப் பெற்றுள்ளது. தற்போது பாஜகவின் வேட்பாளராக முகேஷ் தலால் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி உள்ளிட்டோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் மாற்று வேட்பாளர் ஆகியோரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வென்றுள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது.

பாஜகவின் இந்த அணுகுமுறைக்கு காங்கிரஸ் கசித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது சமூக வலைதளப் பக்கங்களில், “அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் முற்று முழுதாக சீர்குலைக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் சர்வாதிகாரி முகம் இப்போது வெளிப்பட்டு நிற்கிறது” என கடுமையாக சாடியுள்ளார். மேலும் “இந்த தேர்தல் என்பது ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கானது அல்ல. இந்த நாட்டைப் பாதுகாப்பதற்கான தேர்தல். நமது அரசியல் சாசனத்தை பாதுகாபதற்கான தேர்தல் என காங்கிரஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இத்தகைய போக்குகளைத் தடுக்கத்தான்” எனவும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.