சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து அதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், விலை உயர்ந்த சிகரெட்கள், வன உயிரினங்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமின்றி கஞ்சா, ஹெராயின், ஆம்பெட்டமைன், கோக்கைன் போன்ற போதைப்பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவது வருகின்றன.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுடன், மத்திய வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) அதிகாரிகளும் இணைந்து பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து ஏப்ரல்24-ம் தேதி (நேற்று) வரும் பயணிகள் விமானத்தில் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளும், வருவாய் புலனாய்வு துறைஅதிகாரிகளும் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனைசெய்து வெளியே அனுப்பினர்.
அந்த விமானத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக விமான நிலையத்துக்குள் அமர்ந்திருந்தார். அவர் மீது சந்தேகம் வந்ததால், அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த கைப்பையை திறந்து சோதனை செய்தபோது, அதில், போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப் பொருள் பாக்கெட்டை கைப்பற்றிய அதிகாரிகள், அவரது பயணத்தை உடனடியாக ரத்து செய்து,அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இது ஹெராயின் போதைப் பொருள் என்று அவர் தெரிவித்துள்ளார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதை பரிசோதனை செய்தபோது, அது மிகவும் விலை உயர்ந்த கோக்கைன் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதன்சர்வதேச மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர் விசாரணைக்காக, அவரை தியாகராய நகரில் உள்ள வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுபோல, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எவ்வளவு காலமாக போதைப்பொருளை கடத்தி வருகிறார். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கேட்டபோது, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
எத்தியோப்பியா, தாய்லாந்து, கினியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. அதனால், சென்னை விமான நிலையத்தில் முன்பு இருந்ததைவிட கண்காணிப்பும், சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு கிலோ கோக்கைன் போதைப் பொருள் முதல் தரம் கொண்டதாக கருதப்படுவதால், விலையும் பல மடங்கு அதிகம். இந்த கோக்கைன் ஒரு கிராம் என்பது சர்வதேச மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் இருக்கும். அதன்படி, தற்போது சிக்கியுள்ள ஒரு கிலோ கோக்கைனின் மதிப்பு ரூ.50 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.