பிரதமரின் கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி!

தனது கோடீஸ்வர நண்பர்ளுக்காக ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவை 2-வது கட்டத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் கூறியுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி, தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த பணம் இந்தியர்களின் வலியை, தேவையை சரிசெய்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ‘அதானிகள்’ போன்றவர்களை உருவாக்குவதற்காக செலவிடப்பட்டிருக்கிறது. இந்த பணத்தில் சுமார் 16 கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வழங்கியிருக்க முடியும்.

16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் வழங்கியிருக்கலாம். 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களின் குடும்பங்களின் வாழ்க் கையை மேம்படுத்தியிருக்க முடியும். 20 ஆண்டுகளுக்கு ரூ.400-க்கு கேஸ் சிலிண்டர்களை மொத்த நாட்டுக்கும் வழங்கியிருக்க முடியும். இந்தப் பணத்தின் மூலம் இந்திய ராணுவத்தின் மொத்த செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்றிருக்கலாம்.

பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர்களுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம். இந்தியர்களின் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பணம், அதானிகள் போன்றவர்களுக்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்கமாட் டார்கள். இனி நிலைமை மாறும்.ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்துக்காகவும் காங்கிரஸ், அரசை வழிநடத்தும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.