தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை; விஷம்தான் பரவியுள்ளது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதன்படி, நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நேற்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 94 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பீகாரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ‘காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை வாக்கு அரசியலுக்காக திசைதிருப்பமாட்டேன். இதுதான் மோடியின் உத்தரவாதம். காங்கிரசின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் முத்திரையை கொண்டுள்ளது’ என்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் இல்லை. மோடியால் பரப்பப்பட்ட விஷம்தான் உள்ளது. நாட்டு மக்கள் சந்தித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதார பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்ப மோடி முயற்சிக்கிறார். ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது முதல் ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள் தெரிகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.