ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார பாடல் கடந்த 25-ம் தேதி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 2 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடலை அக்கட்சியின் எம்.எல்.ஏ. திலிப்பாண்டே எழுதி பாடியுள்ளார். இந்நிலையில் இந்தப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட பிரச்சார பாடல், பாஜக மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்துள்ளது. ஆனால் அதில் பாஜகவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் தேர்தல் நடத்தை முறைகளையும் மீறவில்லை. உண்மையான வீடியோ மற்றும் தகவல்கள்தான் அதில் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்சியின் பிரச்சார பாடலுக்கு தேர்தல்ஆணையம் தடை விதித்திருப்பது இதுதான்முதல் முறையாக இருக்கும் என கருதுகிறேன்.
பாஜக தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் அக்கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜக சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொண்டால் அது சரி. ஆனால், அதுபற்றி மற்றவர்கள் பேசினால் தவறு. இது ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது. பாஜகவினர் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சார பாடல்களுக்கு தடை விதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.