மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி, கஞ்சா பொட்டலத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்க முயன்ற மதுரை பாஜக நிர்வாகி சிக்கினார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுக்க திட்டமிட்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மதுரைக்கு வந்தார். இதன்பின், 10.20 மணிக்கு கார் மூலம் கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். உடன் அவரது குடும்பத்தினரும் சென்றனர். முதல்வரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவின்பேரில், பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், பாதுகாப்பை மீறி பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், ஓபிசி அணி நிர்வாகியுமான சங்கரபாண்டி என்பவர் முதல்வரிடம் கஞ்சா பொட்டலத்துடன் புகார் மனு ஒன்றை அளிக்க திட்டமிட்டார். முதல்வர் விமான நிலையத்தில் வந்து இறங்கி வெளியே செல்வதற்காக வந்தபோது, அவர் போலீஸ் தடையை மீறி செல்ல முயன்றதாக தெரிகிறது. அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலம், மனுவை கைப்பற்றினர்.
கைப்பற்றிய மனுவில், ‘தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா, போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் எளிதில் கிடைக்கிறது. தமிழக இளைஞர்கள், மாணவிகள், ஏழை கூலித் தொழிலாளர்கள், சிறுவர்கள் போன்றோர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் சமூக விரோத குற்றச் செயல்கள் அதிகரிக்கிறது. இது வேதனை அளிக்கிறது. எனவே, தாங்கள் தமிழக மக்களின் நலன் கருதி தடுக்க வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இத்துடன் எளிதில் கிடைக்கும் கஞ்சா பொட்டலமும் இணைத்துள்ளேன்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சங்கரபாண்டியிடம், அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது. எங்கிருந்து வாங்கினார் போன்ற கோணத்திலும், அவரது மனநலம் குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். முதல்வருக்கான பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி கஞ்சா பொட்டலத்துடன் முதல்வரை சந்திக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி கொடைக்கானலிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் போலீஸ் தரப்பில் கேட்டபோது, ”முதல்வரின் வருகையின்போது, பாதுகாப்பை மீறி செயல்பட்ட பாஜக நிர்வாகியிடம் விமான நிலைய அதிகாரிகள், உளவுத் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதன்பின், எங்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவருக்கு கஞ்சா பொட்டலம் எப்படி வந்தது என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது” என்றனர்.