மக்களவை தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் ஏன் அவசரமாக கைது செய்யப்பட்டார் என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், “மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இதுவரை எந்தவித பறிமுதல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்படி நடந்திருந்தால், இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு உள்ள தொடர்பு என்னஎன்பதை தெளிவுபடுத்த வேண்டும். மக்களவை தேர்தலுக்கு முன்பாக அவர் ஏன் அவசரமாக கைது செய்யப்பட்டார் என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்க வேண்டும்.
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்பான வழக்கில் ஆதாரம் இருப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், கெஜ்ரிவால் வழக்கில் அதுபோன்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கில் நீதித் துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். விசாரணையின் தொடக்கத்துக்கும், கைதுக்கும் இடையில் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி. தனிநபர் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. அதை நாங்கள் மறுக்க முடியாது” என்றார்.
இந்த வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை தங்களது பதிலை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.