சல்மான் கான் வீட்டருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் (ஏப்ரல்) 14ம் தேதி அதிகாலை 4.55 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சல்மான் கான் வீட்டின் வெளியே துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். பைக்கில் வந்த மர்ம நபர்கள் 3 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டறிந்த போலீஸார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அதன்படி, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா (24), சாகர் பால் (21) என்ற இரு இளைஞர்களை மும்பை காவல் துறை கைது செய்தது. தொடர்ந்து இந்த இருவருக்கும் துப்பாக்கிகளை வழங்கியதாக அனுஜ் தபன், சோனு சுபாஷ் சந்தர் என்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அனுஜ் தபன் சிறையிலேயே தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டது எப்படி, தற்கொலைக்கு தூண்டியது யார் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.