மேகேதாட்டில் அணை கட்ட தமிழக அரசு துணைபோவதாக கூறி தஞ்சை விவசாயிகள் போராட்டம்!

கர்நாடக அரசையும், தமிழக அரசையும் கண்டித்து காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூரில் போராட்டம் நடந்தது.

மேகேதாட்டில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தமிழக அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி, காவிரி மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் இன்று (மே 2) போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு, தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அங்குள்ள முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக அம்மாநில மக்களிடம் வாக்குறுதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசும் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மறைமுகமாக உதவி வருகிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேகேதாட்டு அணை விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். கர்நாடக அரசுக்கு தமிழக அரசு துணை போவதாக தமிழக விவசாயிகள் கருதும் நிலை உள்ளது.

இப்படி மேகேதாட்டுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலையால், தமிழகம் வறண்டு பாலைவனமாகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. எனவே, கர்நாடகவுக்கு தமிழக அரசு துணைபோகிறது என தமிழக விவசாயிகள் கருதுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊர்வலத்தின்போது விவசாயி ஒருவரை இறந்தவர் போல் தூக்கிக் கொண்டு மற்ற விவசாயிகள் சென்றனர். அவரை முற்றுகை போராட்டம் நடைபெறும் இடத்தில் படுக்க வைத்து, அவர் இறந்தது போல் பாவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். போராட்டத்தில் பி.அய்யாக்கண்ணு, மகாதானபுரம் ராஜாராமன், பாலு தீட்சிதர், நாமக்கல் பாலசுப்பிரமணியன், பயரி எஸ்.கிருஷ்ணமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.