நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம், “எனது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என நான்கு பக்கங்கள் கொண்ட புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில், கரைசுத்து புதூர் உவரியில் (நாடார் உவரி) உள்ள தனக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரில் உடல் இன்று (மே 4) மீட்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், மாவட்ட எஸ்பிக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், ரூபி மனோகரன் உட்பட சில காங்கிரஸ் தலைவர்களை குற்றஞ்சாட்டி வாசகங்கள் உள்ளன. இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக சென்னையில் இருந்து நெல்லை விரைந்துள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது இரங்கல் செய்தியில், “பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராஜர் மீது அளப்பரிய பற்று கொண்டு இளமை பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிக்கின்ற கட்சிப் பணிகளை எல்லாம் மிகுந்த பொறுப்புணர்வோடு நிறைவேற்றி இயக்கப் பணியாற்றி வந்த இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்கின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தனது இரங்கல் செய்தியில், “நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் எனும் செய்தி பேரிடியாக வந்துள்ளதை அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.ஜெயக்குமார் தனசிங் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர்.
மக்களவைத் தேர்தலின் போதும் சிறப்பாக தேர்தல் பணியாற்றியவர். இவரது மறைவு குறித்து காவல்துறை புலனாய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.