பிரிஜ் பூஷன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனின் மகன் கரண் சிங், உத்தர பிரதேச மாநிலத்தின் கைசர்கஞ்ச் மக்களை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ளார். தேர்தலில் போட்டியிட கரண் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இது குறித்து பஜ்ரங் பூனியா தனது ‘எக்ஸ்’ தளத்தில், “நாட்டுக்காக பதக்கங்களை வாங்கிய வீராங்கனைகள் தெருவில் இழுக்கப்படுவதும், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவரின் மகனுக்கு தேர்தலில் சீட் வழங்கப்படுவதும் இந்த நாட்டின் துரதிருஷ்டம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெளியிட்ட பதிவில், “இந்த நாட்டின் மகள்கள் தோற்றுவிட்டனர், பிரிஜ் பூஷன் வென்றுவிட்டார். இதுவரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நீதியை தவிர வேறு எதையும் நாங்கள் கேர்ர்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் தண்டிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட அனைத்து அரசியல் கட்சிகளிலும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இங்கு பிரிஜ் பூஷன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது அவரது மகனுக்கு சீட் வழங்கியது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. பிரிஜ் பூஷன் தவறு செய்தவர் என்று நாமாகவே எவ்வாறு முடிவு செய்ய முடியும்? இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.