மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
முன்னதாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமரை உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவேற்றார். பிரதமர் மோடி வெள்ளை நிற பைஜமா, காவி நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். வழியில் அவர் மக்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திய வண்ணம் வந்தார். தன்னை ஓவியமாக வரைந்திருந்த ஒருவருக்கு அந்த ஓவியத்தின் கீழ் தனது கையொப்பத்தை இட்டுக் கொடுத்தார். அதேபோல் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்த சிறுமி ஒருவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு அவர் அளித்தப் பேட்டியில், “இன்று மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நமது கலாச்சாரத்தில் தானம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். வாக்கு தானம் செய்ய வேண்டும். நான் எப்போதுமே இங்கிருந்து தான் வாக்களிக்கிறேன். இத்தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்” என்று கூறினார்.
பிரதமர் தனது பேட்டியின்போது, “இந்திய தேர்தல் நடைமுறைகளும், தேர்தல் நிர்வாகமும் உலக ஜனநாயக நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டிய உதாரணங்களை உள்ளடக்கியவை. உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் இவற்றைப் பற்றி நிச்சயமாக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்த ஆண்டு உலகம் முழுவதும் 64 தேசங்களில் தேர்தல் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு ஜனநாயகத் திருவிழா நடைபெறும் ஆண்டு. இந்தியாவில் உள்ள 900+ டிவி சேனல்களும், 5000க்கும் அதிகமான நாளிதழ்களும் தேர்தல் திருவிழாவால் வண்ணமயமாக களைகட்டியுள்ளன. தேர்தல் வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பணிச்சுமை அதிகம். அவர்கள் அங்குமிங்கும் அழைந்துதிரிய நேரிடும். ஆகையால் அனைத்து ஊடகவியலாளர்களும் தங்களின் உடல்நலனில் அக்கறை கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வெயிலில் செல்ல வேண்டியுள்ளதால் நிறைய தண்ணீர் அருந்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.