உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
போா்க் களங்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி விரைவில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. உக்ரைன் போா் விவகாரத்தில் தங்களது ஈடுபாட்டை அதிகரிக்கவிருப்பதாகக் கூறி, இந்த விவகாரத்தில் பதற்றத்தைத் தூண்டிவரும் மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலடியாக இந்த போா் ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது அணு ஆயுதங்களின் ஆயத்த நிலையை ரஷ்யா அவ்வப்போது சோதித்துவந்தாலும், முதல்முறையாக அத்தகைய போா் ஒத்திகையை அந்த நாடு தற்போதுதான் வெளிப்படையாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.