தேர்தல் ஆணைய விதிகளை மீறி ரூ. 2 கோடி வரை செலவு செய்துள்ளதாக மத்திய சென்னை பாஜக வேட்பாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ. 95 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. ஆனால் இந்த உச்சவரம்பை மீறி மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வினோஜ் பி.செல்வம் அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தேர்தல் செலவு கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையாக தாக்கல்செய்ய வேண்டும். பொய் கணக்கு சமர்ப்பிக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய முடியும். மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வினோஜ் பி.செல்வம், தேர்தல் ஆணைய விதிகளை மீறி தமிழ், ஆங்கில பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ரூ.2 கோடி வரை செலவு செய்து விளம்பரம் கொடுத்துள்ளார். இது தேர்தல்நடத்தை விதிகளுக்குப் புறம்பானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த கணக்குவிவரங்களை பரிசீலித்து அதன்பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தற்போதைய சூழலில் மனுதாரரின் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவருடைய புகாருக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.