ஹரியாணாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட வேண்டும் என்று அம்மாநில முன்னாள் துணை முதல்வரும் ஜேஜேபி தலைவருமான துஷ்யந்த் சவுதாலா ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு துஷ்யந்த் சவுதாலா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவினை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் சமீபத்தில் வாபஸ் பெற்றதால் ஆளும் பாஜக அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்துவிட்டது. இந்நிலையில், தனது பெரும்பான்மையை பாஜக அரசு சட்டப்பேரவையில் நிரூபிக்க உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இதையடுத்து துஷ்யந்த் சவுதாலா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
ஹரியாணாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாஜக அரசு, ஒரு பாஜக எம்எல்ஏவும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை இழந்துள்ளது. மேலும் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெறுவதாக ஆளுநருக்குக் கடிதம் அளித்துள்ளனர். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) நிச்சயம் ஆதரவு தெரிவிக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. நாங்களும் ஆளுநருக்கு இது பற்றி கடிதம் எழுதியுள்ளோம்.
தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இதில் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உத்தரவிடவும் ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஹரியாணா சட்டப்பேரவை மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டது. ஆனால், தற்போது 88 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சட்டப்பேரவையின் பெரும்பான்மை பலம் 45 என்ற நிலையில் முன்னதாக பாஜக வசம் 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், தற்போது மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் பட்சத்தில் காங்கிரஸின் பலம் 43 ஆக உயரும். இரண்டு எம்எல்ஏக்கள் யாருக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை வகிக்கின்றனர்.
துஷ்யந்த் சவுதாலா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டரை நேற்று மதியம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் மஹிபால் தாண்டா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.