பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புதிதாக இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பாக சிஎம்டிஏவின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பிய புகாரில் போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர். இந்நிலையில் தான் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் கோவைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் செய்தி ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரிலும், தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவர் வீரலட்சுமி என்பவர் அளித்த புகாரிலும் தனித்தனியே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இன்று போலீசார் கோவையில் இருந்து சென்னை அழைத்த சென்றனர்.
இந்நிலையி்ல தான் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். அதாவது சிஎம்டிஏ எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பற்றி அவதூறு பரப்பியதாக கொடுக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கர் மீது இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் சென்னை சைபர் கிரைம் போலீசில் மட்டும் சவுக்கு சங்கர் மீது 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட உள்ளார்.
இதுமட்டுமின்றி சவுக்கு சங்கர் மீது தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை என்பது 6 ஆக அதிகரித்துள்ளது. அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரின் 3 வழக்குகளோடு, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மற்றும் சேலம் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த 2 வழக்குகள் மற்றும் தேனியில் கைது செய்யப்பட்டபோது காரில் கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கு என்று மொத்தம் 6 வழக்குகள் சவுக்கு சங்கர் மீது போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில் 5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தொடர்பான அவதூறு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.