ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிப்போர் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று நீர்வளத் துறை யினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதனால் நீர்நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
முதற்கட்டமாக, ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களில் நீர் தேக்குவதற்காக வைகை அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் அணையின் சிறிய மதகுகள் வழியே சீறிப் பாய்ந்து ஆற்றின் வழியே சென்றது. வரும் 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மொத்தம் 915 மில்லியன் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதேபோல் சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 376 மில்லியன் கன அடி நீரும், வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 6 நாட்களுக்கு மதுரை மாவட்டத்துக்காக 209 மில்லியன் கன அடி நீரும் திறக்கப்பட உள் ளது. மொத்தம் 15 நாட்களில் வைகை அணையில் இருந்து 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 56.66 அடியாகவும் (மொத்த உய ரம் 71 அடி) நீர்வரத்து விநாடிக்கு 259 கன அடியாகவும் உள்ளது. தற்போது அணையில் இருந்து ஆண்டிபட்டி-சேடபட்டி உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரத்து 72 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வைகை ஆற் றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.