கர்நாடகா எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மற்றும் ஆபாச வீடியோ கால் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி சென்ற நிலையில் அவரை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் முயன்று வருகின்றனர். இந்நிலையில் தான் திடீர் ட்விஸ்ட்டாக பாஜக பிரமுகரை எஸ்ஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பெரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா சட்டசபை தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பெயர் பிரஜ்வல். இவர் ஹாசன் எம்பியாக உள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். ஹாசன் லோக்சபா தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடந்தது. பிரஜ்வல் ஓட்டளித்தார். அதன்பிறகு அவர் ஜெர்மனி சென்றார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஹாசன் தொகுதி முழுவதும் அவரது ஆபாச வீடியோக்கள் பரவியது தான். அதாவது உதவி கேட்டு சென்ற பெண்கள், கட்சி நிர்வாகிகளை, வீட்டு பணிப்பெண்களை அவர் மிரட்டி உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வீடியோ காலில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். மொத்தம் 300க்கும் அதிகமான பெண்களிடம் அவர் இப்படி தவறாக நடந்து 2,976 வீடியோக்களை பென் டிரைவில் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பெரும் பிரச்சனையான நிலையில் அவர் ஜெர்மனி சென்றார். பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
இதற்கிடையே தான் பிரஜ்வல் வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகர் தேவராஜே கவுடா என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அதாவது சித்ரதுர்கா மாவட்டத்தில் காரில் சென்ற தேவராஜே கவுடாவை எஸ்ஐடி போலீசார் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்டது ஏன்? என்று கேட்டபோது, தேவராஜே கவுடா தான் பிரஜ்வல் தொடர்பான ஆபாச வீடியோக்களை பரப்பியதாகவும், அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவராஜே கவுடா கடந்த சட்டசபை தேர்தலில் பிரஜ்வல் தந்தை ரேவண்ணாவை எதிர்த்து ஹோலேநரசிப்புரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். இவருக்கும், ரேவண்ணாவுக்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் உள்ளது. இத்தகைய சூழலில் தான் பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ பென் டிரைவ் அவரது குடும்பத்தில் டிரைவராக இருந்த கார்த்திக் என்பவரிடம் சிக்கியது. கார்த்திக் அதனை தேவராஜே கவுடாவிடம் வழங்கியதாகவும், அதனை தேவராஜே கவுடா தான் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த வழக்கில் எஸ்ஐடி போலீசார் இன்னும் பிரஜ்வல்லை கைது செய்யவில்லை. பிரஜ்வல்லுக்கு எதிராக பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.