ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கலவரம்: காவல் அதிகாரி பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 90 பேர் காயமடைந்தனர்.

பணவீக்கம், அதிக வரி விதிப்பு, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அடக்குமுறை: குறிப்பாக, முசாபராபாத் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாதுகாப்பு படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது. இதில், ஏராளமான வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. அமைதி வழியில் நடைபெறும் போராட்டங்களை அடக்குமுறையை ஏவி அரசு கட்டுப்படுத்த முயல்வதாக இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஜம்மு-காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு மற்றும் வர்த்தக கூட்டமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதனிடையே, சனிக்கிழமை பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முசாபராபாத் வர்த்தக சங்கத்தின் தலைவரும், அவாமி நடவடிக்கை குழு உறுப்பினருமான நவாஸ் மிர் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் அமைதியான வழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரும் உள்ளூர்வாசிகளின் வீடியோக்கள் வைரலாகி உள்ளன. அவர்கள் அனைவரும் வெளியில் வந்து தங்களது உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும் என்றார்.