பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தற்போது மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்கள் அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாகதான் நடைபெறுகிறது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று வரை 4 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பிருப்பதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மட்டுமல்லாது தேர்தலின் போது எந்த கட்சிக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் ஒப்புகை சீட்டை வைத்து தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த சீட்டுக்கள் பதிவான வாக்குகளுடன் எண்ணப்படுவதில்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விவிபேட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க போதுமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் 5-6 மணி நேரத்தில் பணியை முடித்துவிடலாம். 24 லட்சம் விவிபேட் இயந்திரங்களை வாங்க அரசு ரூ.5000 கோடியை செலவழித்துள்ளது. ஆனால் தற்போது வரையில் வெறும் 20,000 விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம்தான் வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. எனவே பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். இருப்பினும் சில முக்கிய உத்தரவுகளையும் தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்டடிருந்தனர். அதாவது வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். விரிவாக சொல்வதெனில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான ‘மெமரியை’ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பதிவான வாக்குகளுடன் 100% ஒப்புகளை சீட்டுகளை எண்ணக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அருண்குமார் அகர்வால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்.