2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி திருமணம் குறித்து மேடையில் பதிலளித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்தது.
ராகுல் காந்தி தீவிரமாக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது இடைமறித்த கூட்டத்தினர், அவரின் திருமணம் குறித்து கிண்டல் செய்ததுடன், எப்போது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது தனது இருக்கையில் எழுந்து மைக்கின் அருகே வந்த சகோதரி பிரியங்கா காந்தி, முதலில் மக்களின் கேள்விக்கு பதில் கொடு என்று கூறி புன்னகையுடன் தனது இருக்கைக்கே மீண்டும் சென்றார். மக்களின் கேள்விக்கு பதில் கொடுத்த ராகுல் காந்தி, “நான் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று மட்டும் தெரிவித்தார்.
உ.பி.யில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளாக உள்ளன. இங்கு நேரு – காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர். அமேதியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2004 முதல் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். எனினும் அவர் 2-வது தொகுதியாக போட்டியிட்ட, கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இப்போதைய தேர்தலில் இங்கு ராகுல் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுபோல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியா காந்தி, உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கெனவே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் களமிறங்குவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அமேதி தொகுதியில் நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியான கே.எல். ஷர்மா போட்டியிடுகிறார். அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.