விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல: அதிகாரிகள் விளக்கம்!

விழுப்புரம் அருகே குடிநீர் கிணற்றில் யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில் அங்கு உரிய ஆய்வு செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் கிணற்றில் விழுந்து கிடந்தது வெறும் தேன் அடை என்பதை உறுதிப் படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதிக்கு உட்பட்ட கஞ்சனூரை அடுத்த கிராமம் கேஆர் பாளையம். இக்கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் பொதுக் கிணற்றில் நேற்று (செவ்வாய்) இரவு யாரோ மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இக்கிணற்று நீரை சுமார் 200 குடும்பத்தினர் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில் இந்நிகழ்வு அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த மக்கள் புகாரை ஏற்று கஞ்சனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அதிகாரிகளுக்குக் கிடைக்க தாசில்தார் உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். கிணற்றுக்குள் ஆட்களை இறக்கி சோதனை செய்ய அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டது. கிணற்றில் இருந்த மக்கள் குறிப்பிட்ட பொருளை வெளியே எடுத்துவந்த சோதனை செய்தபோது அது வெறும் தேன் அடை என்பது தெரியவந்தது. இதனை விக்கிரவாண்டி கோட்டாட்சியரும் உறுதி செய்தார். இதனையடுத்து மக்களும் நிலைமையை உணர்ந்து நிம்மதி தெரிவித்தனர்.

மேலும், “கிணற்றில் இருந்த நீர் சோதனை செய்யப்பட்டுவிட்டது. அது முற்றிலும் பாதுகாப்பான குடிநீர்” என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதோடு, கிணற்றைச் சுற்றி கம்பிவேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கிராம மக்களை மேலும் நிம்மதி அடையச் செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது. அந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அறியும் சோதனைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் விக்கிரவாண்டி கிராம மக்களின் புகார் பரபரப்பானது. ஆனால் கிணற்றில் விழுந்து கிடந்தது தேன் அடை என்பது துரிதமாகக் கண்டறிடப்பட்டது பொது மக்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் நிம்மதியளித்துள்ளது.