டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், தன்னை பலமுறை கன்னத்தில் அறைந்ததாகவும், மார்பு, வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் அவர் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஸ்வாதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார். அதில், ‘‘கடந்த 13-ம் தேதி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார். என்னை தரையில் இழுத்து தள்ளினார். இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின. எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்’’ என்று தெரிவித்துள்ளார். இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஸ்வாதி நேற்று ஆஜராகி, மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கிடையே, முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் ஸ்வாதி அமர்ந்திருக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அந்த வீடியோவில், ஸ்வாதியும், பாதுகாவலர்களும் பேசும் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள பிபவ் குமார் அந்த வீடியோவில் இல்லை.
இதுகுறித்து ஸ்வாதி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘அரசியல் ரவுடி (பிபவ் குமார்) தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார். இதற்காக அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். முதல்வர் அலுவலகத்தின் வீடியோ பதிவுகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டில் டெல்லி போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். வரவேற்பு அறையில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஸ்வாதியும் உடன் இருந்தார். பிபவ் குமார் தன்னை எவ்வாறு தாக்கினார் என்று போலீஸாரிடம் அவர் விளக்கம் அளித்தார். பின்னர் ஆய்வுக்காக, அங்குஇருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் பெற்றுச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறும்போது,‘‘புகாருக்கு உள்ளான பிபவ்குமாருடன் சேர்ந்து கெஜ்ரிவால் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளார். இது வெட்கக்கேடானது. ஸ்வாதி தாக்கப்பட்டது குறித்து கெஜ்ரிவால் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுயமரியாதை உள்ள பெண்கள் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டை பாஜக மகளிர் அணியினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, தேசிய மகளிர் ஆணையம் முன்பு 16-ம் தேதி ஆஜராகுமாறு பிபவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாததால், 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நேற்றும் அவர் ஆஜராகவில்லை.