இலங்கை இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஏராளமானவர்கள் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இலங்கையின் வடகிழக்கு பகுதியில் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். தங்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கு அவர்கள் தனிஈழம் கோரி போராட தொடங்கினர். இது இலங்கையின் உள்நாட்டு போராக உருவானது. 2007 காலக்கட்டத்தில் இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார். அவர் ஈவு ஈரக்கமின்றி ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை ராணுவத்தின் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தனர். இந்த போர் 2009 மே 18ல் முடிவுக்கு வந்தது.
குறிப்பாக இந்த போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டது. இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இழைக்கப்பட்ட பெரும் கொடுமையாகவும், தமிழர் இனத்தை கொன்று குவித்த கொடூர செயலாகவும் இன்று வரை பார்க்கப்படுகிறது. அதோடு சரித்திரத்தில் அழிக்க முடியாது பெரும் வடுவாக இந்த படுகொலை சம்பவம் மாறி உள்ளது.
இந்நிலையில் தான் இலங்கை இறுதிக்கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவுக்கூறும் வகையில் இலங்கை உள்நாட்டு போர் முடிவடைந்த மே 18ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இலங்கை தமிழ் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் இன்றைய தினம் தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.