ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு அரசு பணி கிடையாது: அமித் ஷா!

காஷ்மீர் மக்களில் எவரேனும் தீவிரவாத அமைப்புகளில் இணைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படமாட்டாது என்று அமித் ஷா கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

காஷ்மீர் மக்களில் எவரேனும் தீவிரவாத அமைப்புகளில் இணைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படமாட்டாது என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். ஒருவேளை தங்களது உறவினர் இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குடும்பத்தினர் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டு துப்பு கொடுத்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். ஏற்கெனவே எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தை எதிர்த்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால் இந்த முடிவு அமலுக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

முன்னர் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அந்த வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தீவிரவாதிகளுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் இறுதிச்சடங்கு செய்யப்படுவதை இந்திய அரசு அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளைக் களைவதற்காக அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதி ஆதாரத்தை முடக்க தேசிய புலனாய்வு முகமை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் மத்திய அமைப்புக்கு மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்ததன் மூலம் தீவிரவாத கொள்கைகளைப் பிரசுரித்துப் பரப்பி வந்த செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாம் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டது மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார்.