அவதூறு வழக்கில் டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிஷி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக ரூ.25 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தன்னை விலைக்கு வாங்க முயன்றதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார். இதற்கு மறுத்தால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்துவிடுவோம் என்று பாஜக மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதிஷி ஊடகத்தின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் அதிஷி ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.