தமிழ்நாட்டில் 18 வயதுக்கு கீழே இருப்பவர்கள் இருசக்கரம் வாகனம் ஓட்டி பிடிபட்டால் கடுமையான அபராதமும், ஆர்.சி. புக்கை ரத்து செய்யும் நடைமுறையும் ஜூன் 1 முதல் அமலாகின்றன.
இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தமிழ்நாட்டில் தான் அதிகம். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதே இதற்கு முக்கிய காரணமாக போக்குவரத்து துறை தெரிவிக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.
இவை எல்லாவற்றையும் விட மேலாக, 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள், வாகனம் ஓட்டி ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கின்றன. 18 வயது கூட நிரம்பாத பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் வாகனங்களை எக்குத்தப்பாக ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளன. இதையடுத்து, இதனை தடுப்பதற்கான விதிமுறைகளை இயற்றியுள்ள தமிழக அரசு, அதனை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்த போகிறது.
அதன்படி, 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் ஆர்.சி. உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், பிடிபட்ட சிறாருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், அவருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. இந்த விதிமுறைகள் ஜூன் 1 முதல் அமலாக போவதாக தமிழக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.