வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வெடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த மே 25 ஆம் தேதி மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார். அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வைகோவின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தன. அதை சரி செய்ய கடந்த மே 29 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டது. நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வைகோ இடறி விழுந்து தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் அறிந்ததுமே, வைகோவின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். துரை வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வைகோவின் உடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்துள்ளார். தோள் பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும், பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் துரை வைகோ தெரிவித்தார். இதையடுத்து, அறுவை சிகிச்சை முடிந்து வைகோ வீடு திரும்பிய பின் அவரை வந்து சந்திப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக துரை வைகோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்துள்ளார். அவரிடம் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததோடு சுமார் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். அப்போது லோக்சபா தேர்தல் முடிவுகள் வரப்போவது பற்றியும் இருவரும் சில நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.