தமிழகத்தில் பாஜகவை நோக்கி ஏற்படுகிற மாற்றம், தொடர் மாற்றமாக மாறி, 2026-ல் பலம் பொருந்திய கட்சியாக பாஜக நிச்சயம் உருவாகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்தநாளையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி பாஜக நிர்வாகிகளுடன் பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், தமிழிசையின் கணவர் சவுந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் திமுகவின் இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா, கொலை, கொள்ளை, கூலிப்படையினர் அட்டகாசம் தான் அதிகளவில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பால் விலை, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தையும் தமிழகம்கண்டுள்ளது. ஆனாலும், திமுகவினர் இது திராவிட மாடல் என கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், திமுகவினர் திராவிட மாயைதான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே, தமிழகத்துக்கான வளர்ச்சித் திட்டங்கள் எந்தவித தடையும் இல்லாமல், கிடைக்க வேண்டுமென்றால் திமுக போன்ற கட்சிகளை தவிர்த்து, பாஜகவை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாக உள்ளது.
இண்டியா கூட்டணி கட்சியினருக்கு அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. அதனால், தான் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஒரு பயனும் இல்லை என்று தான் ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை அனுப்பி வைத்திருக்கிறார். அதேபோல், பினராயி விஜயனும் பங்கேற்கவில்லை. கெஜ்ரிவால் செய்த குற்றத்துக்கு அவர் சிறையில் தான் இருக்க வேண்டும். இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 2-ம் கட்ட தலைவர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.
ஒரே நாளில் பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறோம் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஒரு நாளில் அவர்களால் ஒன்றாக அமர்ந்து பேச கூட முடியவில்லை. தமிழகத்தில் பாஜகவை நோக்கி ஏற்படுகிற மாற்றம், தொடர் மாற்றமாக மாறி, 2026-ல் பலம் பொருந்திய கட்சியாக பாஜக நிச்சயம் உருவாகும். தூய்மையான அரசியல் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக தான் என்னை போன்றவர்கள் மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறோம். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.