ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ராதிகா சரத்குமார், வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’, என பதிலளித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ள நிலையில் இன்று காலை ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராதிகா சரத்குமார், தனது கணவர் மற்றும் மகனுடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் சந்நிதி, கண்ணாடி மாளிகை ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்துக்குச் சென்ற ராதிகா சரத்குமார், பீடாதிபதி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரிடம் ஆசி பெற்றனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஆண்டாள் கோயிலுக்கு வந்துள்ளோம். ஞாயிறன்று, சிவகங்கை மாவட்டம் சிராவயலில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தினோம். பிரச்சாரத்தின் போதே ஆண்டாள் கோயிலுக்கு வர வேண்டி இருந்தோம். நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறவும் ஆண்டாள் தாயாரிடம் பிரார்த்தனை செய்தோம்” என்றார்.
தொடர்ந்து விருதுநகர் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து ராதிகாவிடம் கேள்வி எழுப்பியதற்கு, “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்றார். ராதிகாவுக்கு காலில் அடிபட்டு இருந்ததால் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்தார்.